தடையை மீறி பணம் வைத்து சூதாடி சேவல் சண்டை நடத்திய இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியில் காவிரி ஆறு அருகில் பணம் வைத்து சூதாடி சேவல் சண்டை நடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாயனூர் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையின் போது அங்கு சேவல் சண்டை நடத்தி கொண்டு இருந்தவர்கள் காவல்துறையினரை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள் மற்றும் 18 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர். அதன் பின் காவல்துறையினர் தடையை மீறி சேவல் சண்டை நடத்திய ராஜேஷ், ராஜேந்திரன், மருதுபாண்டியன், சரண்ராஜ், மலையப்பன் ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இவர்களை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கரூர் சிறையில் அடைதுள்ளனர். மேலும் இவர்களுடன் சம்பந்தப்பட்டவர்களையும் வழக்கு பதிந்து காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.