டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது.
டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் நேற்று இரவு 10 மணி முதல் 26 ஆம் தேதி வரை டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டத்தினால் தொழில் காரணமாக புலம்பெயர்ந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப செல்வதற்கு முடிவெடுத்தனர்.
அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தின் ஷப்தர்ப்பூர் மற்றும் டிகாம்ஹர் பகுதிகளை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பேருந்தில் டெல்லியிலிருந்து பயணம் மேற்கொண்டனர். அப்பொழுது மத்தியபிரதேசத்தில் குவாலியர் மாவட்டம் ஜோராசி என்ற பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பயணம் செய்த பலர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.