கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8 45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி.
மக்களிடம் உரையாற்றிய பிரதமர், கொரோனா பாதிப்பை சமாளிக்க கூடுதல் மருத்துவ வசதிகள் செய்து வருகின்றோம். நம் நாட்டில் மிகப் பெரிய மருந்து நிறுவனங்கள் உள்ளன. ஆனால் சூழலில் தற்போதைய தேவை கூட்டு முயற்சிதான். மருந்து நிறுவனங்களுடன் உற்பத்தியை அதிகரிக்க தொடர்ந்து பேசி வருகிறேன்.
கடந்த ஆண்டு போல் மோசமான சூழல் இல்லை. நாடு முழுவதும் மக்கள் தைரியத்துடன், கட்டுப்பாடு நடவடிக்கை மூலம் கொரோனாவின் இரண்டாவது அலையில் இருந்து மீண்டு வருவோம். விழாக் காலங்களில் வரும் நிலையில் பொது மக்கள் கவனமாக செயல்பட வேண்டும்.
தைரியம் மற்றும் அனுபவத்தை வைத்து மட்டுமே கொரோனா பிரச்சினையை எதிர்கொள்ள முடியும். கட்டுப்பாடு மையங்களை அதிகரிப்பதன் மூலம் நாடு முழுவதும் முழு முடக்கம் வருவதை தடுக்க முடியும். அதனால் சரியான விஷயங்களை செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.