Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழக்கடை வியாபாரியிடம் தில்லு முல்லு… சந்தேகத்தில் சிக்கிய பெண்கள்… போலீஸ் தீவிர விசாரணை..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கள்ள நோட்டுகளை மாற்ற முயற்சி செய்த இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காமலாபுரத்தில் வசித்து வரும் சந்தனமேரி என்பவர் பழக்கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவருடைய கடையில் இரண்டு பெண்கள் பழம் வாங்கியுள்ளனர். அந்த பழத்திற்கு 500 ரூபாய் நோட்டை இரண்டு பெண்களும் சேர்ந்து சந்தனமேரியிடம் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த 500 ரூபாய் நோட் வித்தியாசமாக இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த சந்தனமேரி அந்த இரண்டு பெண்களிடமும் 500 ரூபாய் நோட்டு குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்த சிலரின் உதவியுடன் சந்தனமேரி அந்த இரண்டு பெண்களையும் சுற்றி வளைத்து பிடித்தார்.

அதன் பின்னர் அந்த இரண்டு பெண்களையும் அங்கிருந்தவர்கள் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து காவல்துறையினர் அந்த இரண்டு பெண்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த 500 ரூபாய் நோட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டது. அந்த சோதனையில் அது கள்ள நோட்டு என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அந்த பெண்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சுரேஷ்பாபு என்பவரது மனைவி சக்திசூர்யா (33), அந்தப் பெண்ணின் உறவினர் பழனி சண்முகபுரத்தில் வசித்து வரும் மணி என்பவரது மனைவி நாகரத்தினம் (43) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் அந்த கள்ள நோட்டு குறித்து இரண்டு பெண்களிடமும் காவதுறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |