வாழையிலை கட்டு ரூபாய் 100க்கு விற்பனையானதால் விவசாயிகளும் வியாபாரிகளும் வேதனை அடைந்துள்ளனர்.
தற்போது உலகில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதன் விளைவாக திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் குறைவானவர்களே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹோட்டல்கள் இரவு 9 மணிக்கு மேல் இயங்க அனுமதி இல்லை.
இதன் எதிரொலியாக நேற்று வாழை இலை வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 200 வாழை இலை கொண்ட ஒரு கட்டு ரூபாய் 1000 முதல் 1500 க்கு விற்பனையாகும். ஆனால் நேற்று மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் ஒரு கட்டு வாழை இலை ரூபாய் 100 க்கு விற்பனை போனது. மேலும் பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆர்டர்களும் ரத்தானதால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதேநிலைதான் வாழை விவசாயிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. வாழை மரங்களை சாகுபடி செய்து அதில் இருந்து இலைகளை அறுவடை செய்து கட்டுகளாக்கி சந்தைக்கு கொண்டு வர அதிக செலவு ஆகிறது. ஆனால் ரூபாய் 100 க்கு கூட வாழை இலை கட்டு விற்பனையாகாமல் தேங்கி இருப்பதால் மிகுந்த வேதனையாக இருக்கிறது. இது எங்களுக்கு நஷ்டமே என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.