நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக கடந்த 17ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். அவரது மறைவு திரையுலகம் மட்டுமல்லாமல் சமூகத்திலும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மக்களுக்கு பல்வேறு தொண்டுகளை செய்து வந்தார். சமூக சேவை செய்வதில் சிறந்து விளங்கியவர். மக்கள் அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர்.
இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக் விட்டுச் சென்ற ஒரு கோடி மரம் நடும் பணியை திமுக மேற்கொள்ளும் என அக்கட்சியின் சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி அறிவித்துள்ளார். அப்துல் கலாமை தனது நாயகனாக கொண்ட விவேக் ஒரு கோடி மரம் நடும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். சில லட்சம் மரங்கள் நட்ட நிலையில் அவர் காலமாகிவிட்டார். அவரது பணியை திமுக தொடர்ந்து செய்யும் என கூறியுள்ளார்.