திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் 24 வயது இளம்பெண் படித்து வந்துள்ளார். இவரும் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிக்கும் திருநாவுக்கரசு என்ற வாலிபரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் காதல் விவகாரம் திருநாவுக்கரசரின் குடும்பத்தினருக்கு தெரியவந்த பிறகு இளம் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி திருநாவுக்கரசர் அவருடன் நெருங்கி பழகியுள்ளார். இதனையடுத்து திருநாவுக்கரசரின் தாயார் நாகம்மாள் என்பவர் இளம் பெண் கர்ப்பமாக இருப்பதை அறிந்து இரு முறை அந்த இளம்பெண்ணுக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளார்.
அதன்பின் அந்த இளம் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு திருநாவுக்கரசும் அவருடைய உறவினரான வசந்த குமார் என்பவரும் இணைந்து அந்த இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த இளம்பெண் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருநாவுக்கரசு, வசந்தகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.