நாகர்கோவில் வந்த ரயிலில் தொழிலாளரிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்தவர் தொழிலாளி வினோத் குமார். இவருடைய மகன் நெல்லை மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை பார்ப்பதற்காக வினோத்குமார் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளார். இந்நிலையில் அந்த ரயிலில் பயணம் செய்த இரண்டு நபர்கள் தாம்பரத்தில் வினோத் குமாருக்கு டீ வாங்கி கொடுத்துள்ளார்கள். அதை டீயை வினோத்குமார் வாங்கி குடித்தவுடன் மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து அந்த மர்ம நபர்கள் அவரிடம் இருந்த 27 ஆயிரம் ரூபாய் பணம் , அவர் அணிந்திருந்த அரை பவுன் மோதிரம் மற்றும் கைபேசி ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு சென்றனர்.
அதன்பின் ரயிலானது நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்தில் வந்து நின்றதும் வினோத் குமாருக்கு மயக்கம் தெளிந்து கண் விழித்துப் பார்த்துள்ளார். அப்போது அவரிடம் இருந்த நகை, பணம், மற்றும் கைபேசி போன்றவை திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் வினோத்குமார் புகார் அளித்தார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு சென்ற அந்த 2 மர்ம நபர்கள் நாக்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. எனவே காவல்துறையினர் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.