கேரளாவில் இரண்டு வருடங்களுக்கு முன்பு மாயமான நபரை பெற்ற தாய் மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்து வீட்டில் புதைத்த சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது.
கேரளா கொல்லம் மாவட்டத்தில் உள்ள எரூர் கிராமத்தில் ஷாஜி பீட்டர் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மாயமானதாக அவருடைய குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். மேலும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் அவர் மாயமானதாக எல்லோரும் நம்பினர். இந்நிலையில் அவரது உறவினர் ஒருவர் இரண்டு தினங்களுக்கு முன்பு பத்தனம்திட்டா மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு சென்று ஒரு கொலை குறித்த உண்மையை கூற வந்துள்ளதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் மதுபோதையில் இருந்ததால் காவல்துறையினர் முதலில் அவர் கூற வந்ததை கேட்க மறுத்ததாக தெரிகிறது.
இதையடுத்து அவர் மீண்டும் மீண்டும் சென்று காவல்துறையினரை தொந்தரவு செய்ததால் அவர் கூறுவதை காவல்துறை அதிகாரிகள கேட்டுள்ளனர். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் காணாமல் போனதாக நம்பப்பட்ட ஷாஜியின் வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு அவருடைய உறவினர் கொடுத்த தகவலின்படி வீட்டின் தரையை தோண்டி பார்த்தபோது மாயமான ஷாஜி எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த ஓணம் பண்டிகையன்று ஷாஜி, அவருடைய தம்பி சஜின் என்பவரால் கொலை செய்யப்பட்டு, அவருடைய தாயின் உதவியுடன் வீட்டிலேயே பள்ளம் தோண்டி புதைத்து அதன் மேல் கான்க்ரீட் தறை போட்டுள்ளனர் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து தாய் பொன்னம்மா மற்றும் சகோதரர் சஜின் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்ட அவர்கள் இருவரும் பல திருட்டு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஷாஜி, வீட்டிற்கு வரும்போதெல்லாம் தகராறு செய்ததாக கூறியுள்ளனர். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த ஷாஜி சண்டை போட்டதாகவும் கூறினார்கள். அப்போது சகோதரர் சஜினுக்கும், ஷாஜிக்கும் இடையே தகராறு முற்றியதால், கோபமடைந்த சஜின், ஷாஜினை தலையில் தாக்கியபோது அவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் இருவரும் சேர்ந்து வீட்டிலேயே ஷாஜியின் உடலை புதைத்ததையும் ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.