செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி, மறைந்த நடிகர் விவேக் அவருடைய மரணத்திற்கும் இந்த தடுப்பூசிக்கும் சம்பந்தமில்லை. சில விஷ்மமானவர்கள் அவருடைய மரணத்திற்கு காரணம் இந்த தடுப்பூசி என்று சொல்கிறார்கள். நான் கூட இரண்டாவது தடுப்பூசி போட்டு கொண்டேன். எனவே இவைகளை நாம் செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகள் இதில் மிகுந்த தோல்வியடைந்து இருக்கிறது. ஏற்கனவே அவர்கள் மனச்சோர்வில் இருக்கிறார்கள். எனவே மீண்டும் அவர்களை நான் விமர்சிக்க விரும்பவில்லை.
நான் இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதே குற்றம் சுமத்துகிறேன். ஏன்னென்றால் இவ்வளவு பெரிய கொரோனா தொற்று இருக்கும் பொழுது தேர்தல் ஆணையம் தமிழகத்தில், மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும், அஸ்ஸாம் போன்ற பகுதிகளில் இவ்வளவு பெரிய பரப்புரை செய்வதற்கு அனுமதி வழங்கி இருக்கக்கூடாது. தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மேற்கு வங்காளத்தில் நான் இனிமேல் பரப்புரை செய்ய மாட்டேன் என்று சொல்லி, தன்னுடைய பரப்புரையில் இருந்து பின்வாங்கி இருக்கிறார். இந்திய தேர்தல் ஆணையம் அதை செய்திருக்க வேண்டும்.
சீனா போன்ற நாடுகளில் உள்ளாட்சித் தேர்தல்களில் யார் தேர்தலில் இருக்கிறார்கள் என்பதை அரசு அறிவித்து விடும். 15 நாட்கள் வரை இடைவெளி தருவார்கள். அதற்குப் பிறகு தேர்தல் நடைபெறும். மக்கள் சென்று வாக்களிப்பார்கள். இந்த முறை அதைப் போன்ற நடைமுறையை நாம் பின்பற்றி இருக்கலாம். நாம் ஊர் கூடி தேர் இழுப்பதுபோல், ஊரில் இருக்ககூடிய எல்லோரும் ஒன்று கூடி, எல்லோரும் ஒன்று சேர்ந்து கொரோனாவை பரப்பிவிட்டு இன்று கொரோனாவை தடை செய்வது என்று வரும்போது மிகுந்த சிரமத்தை தருகிறது.
அதேமாதிரி அலகாபாத்தில் கும்பமேளா… எப்படி இந்த அரசு அதையெல்லாம் அனுமதிக்கிறது ? அதற்குப் பிறகு அதை நம்மால் தடுக்க முடியாது. ஏனென்றால் ஒரு மெய்யறிவு இல்லாத அரசு மேல்மட்டத்தில் இருக்கிறது. அரசுக்கு அந்த துணிவு வேண்டும். அதற்கு தடை போட்டு இருக்கவேண்டும். அதை எல்லாம் செய்தால் தான் இந்தியாவிலும் சரி தமிழகத்திலும் சரி கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.
இல்லையென்றால் பண மதிப்பு இழப்பு நீக்கத்தால் இரண்டு ஆண்டுகாலம் நம்முடைய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததோ, அதைப்போல பொது முடக்கத்தால் ஐந்தாண்டு காலம் நம்முடைய பொருளாதார வீழ்ச்சி அடையும். இன்னும் 10 ஆண்டுகளுக்கு நம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காது.
எனவே எல்லா தொழிற்சாலைகளும் இயங்கவேண்டும், பேருந்துகள் ஓடவேண்டும், ரயில் ஓட வேண்டும். ஆனால், எல்லாவற்றிலும் இடைவெளியை பாதுகாக்க வேண்டும், முக கவசம் அணிந்து இருக்க வேண்டும், பொது மக்களுடைய ஒத்துழைப்பு வேண்டும். வெறுமனையாக நான் அரசியல் மட்டும் சொல்ல விரும்பவில்லை. இதில் பொதுமக்கள் தான் மிகுந்த ஒத்துழைப்பு தரவேண்டும், தருவார்கள் என்று கருதுகிறேன் என கே.எஸ் அழகிரி கூறினார்.