சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சி பகுதிகளான பாண்டியன் நகர், பர்மா காலனி, போக்குவரத்து நகர் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாண்டியராஜன் கலந்து கொண்டு கொரோனா குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தினார்.
மேலும் அந்த நிகழ்ச்சியில் பொது இடங்களில் முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதனை மீறினால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்றும், பொது இடங்களில் அநாகரிகமாக எச்சில் துப்புபவர்களுக்கு ரூ. 500 அபராதமாக விதிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது. இது தவிர கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு சென்று அங்கிருந்த உரிமையாளர்களிடம் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முக கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி வழங்கவேண்டும். பொதுமக்கள் கடைகளுக்கு வரும்போது சமூக இடைவெளியை பின்பற்றுவதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு கைகளை சுத்தம் செய்து கொள்வதற்காக கிருமிநாசினி ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் அதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.