ரஷ்யாவின் ஜனாதிபதி புடின் நாட்டை அச்சுறுத்துவோர் யாராக இருந்தாலும் அதற்கான விளைவுகளை விரைவில் சந்திப்பார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவின் ஜனாதிபதி புடின் தனது வருடாந்திர தேசிய உரையில் கூறியதாவது, ரஷ்யாவுடன் சமீபத்தில் உறவை முறித்துக்கொண்ட நாடுகள் உட்பட அனைத்து நாடுகளுடனும் நாங்கள் நல்லுறவை பேண விரும்புவதாக கூறியுள்ளார். இந்நிலையில் சில நாடுகள் எந்த காரணமும் இன்றி ரஷ்யாவை சீண்டுவதை வழக்கமாக வைத்துள்ளது. ஆனால் நாங்கள் அவர்களுடனான உறவை முற்றிலுமாக முறித்துக் கொள்ள விரும்பவில்லை. மேலும் எங்களுடைய இந்த நல்ல எண்ணத்தை அவர்கள் பலவீனமாக கருதி எங்களுக்கு எதிராக ஈடுபட நினைத்தாலோ அல்லது எங்களுடனான உறவை முறித்துக் கொள்ள விரும்பினாலும் ரஷ்யா அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் என்று அவர் கூறினார்.
அது தவிர ரஷ்யாவின் அடிப்படை பாதுகாப்பு நலன்களை அச்சுறுத்த எண்ணினால் அவர்கள் அதற்கான விளைவுகளை விரைவில் சந்திப்பார்கள் என்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ரஷ்யா, உக்ரைன் எல்லைக்கு அருகே தனது படைகளை அனுப்பி வைத்துள்ளதால் சில வாரங்களாக மேற்கத்திய நாடுகள் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே தொடர்ந்து பதற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கிடையே ஜனாதிபதி புடின் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது இதை விட பயங்கரமான சூழலாக மாறி மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சம் தற்போது உருவாகியுள்ளது.