சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டத்திலுள்ள திருப்புறம்பியம் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சந்திரசேகரன்- ஜெயந்தி தம்பத்தினர் தங்களது பேத்தி பவிக்கா மற்றும் வேறு ஒருவருடன் சேலத்தில் இருந்து அதிகாலை தஞ்சாவூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை சுரேந்தர் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அரியலூர் அருகே உள்ள ஜெயம்கொண்டான் வழியாக கார் சென்று கொண்டிருந்த போது திடீரென்று தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் காரில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கி விட்டனர்.
இதனையடுத்து தீயானது கார் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தக் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமாகி விட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் காரில் பொருத்தப்பட்டு இருந்த ஏசியில் உள்ள கியாஸ் கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இவ்வாறு பற்றி எரிந்த காரில் இருந்து உடனடியாக 5 பேர் கீழே இறங்கியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது .