கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் 8 வட மாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு ஆம்னி பேருந்தில் 35 தொழிலாளர்கள் வேலைக்காக அசாம் மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு புறப்பட்டுள்ளனர். இந்த பேருந்து தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரெட்டி அல்லி பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி கவிழ்ந்து விட்டது. இதனால் அந்த பேருந்தில் பயணித்த 8 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த தர்மபுரி டவுன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 8 தொழிலாளர்களையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு கிரேன் மூலம் காவல்துறையினர் பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த தர்மபுரி டவுன் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.