வட மாநில தொழிலாளர்கள் பயணம் செய்வதற்காக போலியான கொரோனா சான்றிதழ் தயாரித்து வாலிபர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தலப்பள்ளி பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் சென்டர் வைத்து நடத்தி வந்துள்ளார். இதன்மூலம் ஜவுளி வியாபாரிகளுக்கும், கிரானைட் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்களுக்கும் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூரில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் சொந்த மாநிலங்களுக்கு செல்கின்றனர். மேலும் ரயில், விமானம் மற்றும் கார்களில் செல்பவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை சான்றிதழில் நெகட்டிவ் என்று இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் போலியான கொரோனா பரிசோதனை செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நெகட்டிவ் என சான்றிதழ் அளித்து தினேஷ் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு போலியான சான்றிதழ்கள் மூலம் தொழிலாளர்கள் பயணம் செய்து வந்துள்ளனர். மேலும் தினேஷ் அரசு டாக்டர்கள் கையெழுத்து, அரசு மருத்துவமனையின் சீல் போன்றவற்றை அந்த போலி சான்றிதழில் வைத்து கொடுத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மருத்துவ அலுவலர் டாக்டர் கலையரசி பர்கூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தினேஷை கைது செய்து அவரிடம் இருந்த போலியான மருத்துவமனை சீல் மற்றும் சான்றிதழ்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.