சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வருகை இன்றி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த 20ஆம் தேதி முதல் அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலைச் சிகரம், ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி அங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
மேலும் கோடை சீசனில் அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்த்திருந்த வியாபாரிகளுக்கு இது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனையடுத்து ஊட்டி தாவரவியல் பூங்காவின் முன் பகுதியில் இருக்கும் திபெத்தியன் மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளது. ஆனாலும் சாலையோரத்தில் சில கடைகள் திறந்து வைக்கப்பட்ட போதிலும் சுற்றுலா பயணிகள் வர அனுமதி இல்லாத காரணத்தால் வியாபாரம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.