தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பள்ளிவிளை ரயில் தண்டவாளத்தில் ஒரு வாலிபர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நாகர்கோவில் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்த வாலிபர் அருகுவிளை அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் அனிஷ் பிரான்சிஸ் என்பது தெரியவந்துள்ளது.
இவர் பள்ளிவிளை பகுதியில் இருக்கும் ஒரு குடோனில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அனிஷ் பிரான்சிஸ் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி இறந்திருக்கலாம் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனீஸ் பிரான்சிஸ் சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.