புலிக்கு மாட்டு இறைச்சியில் விஷம் வைத்துக் கொன்ற 2 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரம் வனப்பகுதியில் வனத்துறையினர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அப்பகுதியில் பெண் புலி ஒன்று இறந்து கிடந்ததை கண்டனர். மேலும் அங்கிருந்து சிறிது தொலைவில் இரண்டு குட்டிகள் சத்தமிட்டது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் இறந்து கிடந்த புலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.
அதோடு அந்த இரண்டு குட்டிகளையும் மீட்டு சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையில் புலி மாட்டு இறைச்சியில் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மசினகுடி பகுதியில் வசிக்கும் சௌகத் அலி, அகமது கபீர், சதாம், கரியன் போன்றோர் புலிக்கு விஷம் வைத்துக் கொன்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் அகமது கபீர் மற்றும் கரியனை கைது செய்து, தலைமறைவாக இருக்கும் சௌக்கத் அலி மற்றும் சதாமை தீவிரமாக தேடி வருகின்றனர்.