வேலூரில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஓப்புக்கொண்டதால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.
வேலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரின் மகன்சவூரணிஸ் கோஷ் என்பவர் இசிஇ 2 – ஆம் ஆண்டு படித்து வந்தார் . இவர் கடந்த 23 ஆம் தேதி ஆம்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலை விபத்தில் சிக்கி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அவருக்கு திடீரென மூளைச்சாவு ஏற்பட்டது.
இதனால் அவரது பெற்றோர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர் . இதை அடுத்து மாற்று உடல் உறுப்புகளுக்காக பதிவு செய்திருந்த மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர் . இதன்பின் இதயம், நுரையீரல்கள் சென்னை மலர் மருத்துவமனைக்கும் , கல்லீரல் அய்யபாக்கம் அப்பல்லோ மருத்துவமனைக்கும் , வலது சிறுநீரகம் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் , வழங்கப்பட்டது.
மேலும் இடது சிறுநீரகமும், கண்களும் சிஎம்சி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. நள்ளிரவில் உடல்உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் உரிய நேரத்தில் எடுத்துச் செல்லப்பட்டதால் 6 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றனர்.