மகனுக்கு திருமணம் ஆகாததால் தாய் மகனுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி வ.உ.சி காலனி பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அருண் ராயப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பெற்றோர் பெண் பார்த்த போது சரியான வரன் கிடைக்கவில்லை. இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மகேஸ்வரி மகனுக்கு இன்னும் திருமணம் ஆகாததாலும், தனக்கு உடல் நலம் சரியில்லாததாலும் சோகமாகவே இருந்துள்ளார்.
இதனையடுத்து அருண் ராயப்பன் வேலைக்கு செல்லாததால் பனியன் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அருண் ராயப்பன் நீண்ட நேரமாக அழைப்பை ஏற்காததால் அவர்கள் மகேஸ்வரியின் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளனர். அவரும் அழைப்பை ஏற்காததால் சந்தேகமடைந்த பனியன் நிறுவன தொழிலாளர்கள் உடனடியாக ரங்கசாமியை தொடர்புகொண்டு நடந்தவற்றைக் கூறி வீட்டிற்கு சென்று பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற ரங்கசாமி தனித்தனி அறையில் மனைவி சேலையிலும், மகன் கயிற்றிலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த அவினாசி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலை மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மகேஸ்வரி உடல் நலம் சரியில்லாததால், தனது மகனுக்கும் இன்னும் திருமணமாகாத விரக்தியில் மகனோடு சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.