திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வாக்கு எண்ணும் பணி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நிலக்கோட்டை தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகர் தலைமை தாங்கினார். அந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், வருகின்ற இரண்டாம் தேதி காலை 5.30 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்திற்கு தாலுகா அலுவலகத்தில் இருந்து தபால் வாக்குகள் கொண்டு செல்லப்படும். இதையடுத்து சட்டமன்ற தொகுதி வாக்குகள் எண்ணுவதற்கு 14 மேஜைகளும், தபால் வாக்குகள் எண்ணுவதற்கு 5 மேஜைகளும் போடப்படும்.
மேலும் வாக்கு எண்ணுவதற்கு ஒரு மேஜைக்கு ஒரு மேற்பார்வையாளர், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையிட மத்திய அரசு அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவர், உதவியாளர் ஒருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளில் உள்ள பிரதிநிதிகளை வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்க கூடாது என்றும் கூறினார். மேலும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மற்றும் தேர்தல் முகவர்கள் உட்பட வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அனைவரும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வழங்க வேண்டும்.