சிக்னல் கம்பத்தின் மீது ஏறி தலைகீழாக தொங்கியபடி வாலிபர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நால்ரோடு பகுதியில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைந்துள்ளது. இந்த சிக்னல் கம்பத்தின் மீது 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் காலை 11 மணி அளவில் ஏரி சிக்னல் உச்சிக்கு சென்று தலைகீழாக தொங்கியதோடு, அங்கிருந்து குதிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து காவல் துறையினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவ்வழியாக சென்ற லோடு லாரியை சிக்னல் கம்பத்திற்கு நேர் கீழே நிறுத்தி அந்த வாலிபரை பத்திரமாக மீட்டுள்ளனர்.
அதன்பின் அந்த வாலிபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கங்கேஷ்வர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததும், கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோடங்கிபாளையம் பகுதியில் 3 மர்ம நபர்கள் இணைந்து இவரை கத்தியால் குத்தி 4,500 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பின் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கங்கேஷ்வர் அங்கிருந்து தப்பித்து பல்லடம் நோக்கி வந்ததாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.