தற்கொலை செய்து கொள்வதற்கான காரணத்தை வீடியோ பதிவின் மூலம் தனது மனைவி மற்றும் நண்பர்களுக்கு தெரிவித்து விட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி நகர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் அந்த பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தனது நண்பரான அசோக் என்பவருக்கு வேறு ஒருவரிடம் கடனாக பணம் வாங்கி கொடுத்து உதவியுள்ளார். இதனையடுத்து வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு அசோக்கிடம் சரவணன் பலமுறை கேட்டும் அந்த பணத்தை அவர் திரும்ப கொடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஒருநாள் அசோக் நான் உன்னிடம் பணம் வாங்கவே இல்லை என்று சரவணனிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் மன உளைச்சலில் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார்.
அதன்படி அசோக்கிற்கு பணம் வாங்கிக் கொடுத்தது தொடர்பாகவும், அந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்காதது போன்ற அனைத்து சம்பவங்களையும் சரவணன் வீடியோவாக பதிவு செய்து தனது நண்பர்கள் மற்றும் மனைவி கல்பனா போன்றோருக்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அனுப்பர்பாளையம் காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.