உத்தர்காண்ட் மாநிலத்தில் 18 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பு ஊசி இலவசமாக போடப்படும் என்று அந்த மாநிலத்தின் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலில் முற்றிலும் மூழ்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதனை முன்கூட்டியே தடுப்பதற்கு கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் போடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பு ஊசி இலவசமாக போடப்பட்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 18 வயது மேற்பட்டோர் அனைவருமே வருகின்ற 1-ம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் நேரடியாக தடுப்பூசி கொள்முதல் செய்து கொள்ளவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சீரம் இந்தியா நிறுவனம் உற்பத்தி செய்யும் தனது கோவிஷீல்டு தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்துள்ளது.
அதாவது மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ரூ.600 என விற்பனை செய்யப்படும் என்று சீரம் இந்தியா நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் மொத்த தடுப்பூசிகளின் 50% இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கும், மீதமுள்ள 50 சதவீதம் மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படும் என தெரியப்படுத்தியது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 18 வயது மேற்பட்டவர்கள் அனைவருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி முற்றிலும் இலவசமாக போடப்படும் என அந்த மாநிலத்தின் முதல்வர் தீரத் சிங் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.