திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் 20 வயதான இளம்பெண் வசித்து வருகிறார். இவர் துடியலூரில் இருக்கும் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவரும் அப்பகுதியில் தினேஷ் குமார் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திருமணம் செய்துகொள்வதாக அந்த மாணவியை ஏமாற்றி தினேஷ்குமார் நெருக்கமாக பழகியுள்ளார். இதனையடுத்து அந்த மாணவி கர்ப்பமானதால் தினேஷ்குமாரிடம் அதனை தெரிவித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி உள்ளார். ஆனால் தினேஷ்குமார் கருக்கலைப்பு மாத்திரையை அந்த மாணவிக்கு வாங்கி கொடுத்ததுடன், பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று கூறி அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.
இதனால் அந்த இளம்பெண் தினேஷ் குமாரின் வீட்டிற்கு சென்று நடந்ததைக் கூறியதற்கு அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த இளம்பெண்ணை திட்டி அனுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து மீண்டும் தினேஷ்குமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இந்த இளம்பெண் வற்புறுத்தியுள்ளார். அப்போது தினேஷ்குமார் இவ்வாறு அடிக்கடி தொந்தரவு செய்தால் இருவரும் தனிமையில் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வளைதளத்தில் வெளியிடுவேன் என்று அந்த இளம்பெண்ணை மிரட்டி உள்ளார். இதனால் அந்த இளம்பெண் கோவை மாநகர கிழக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தினேஷ் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.