பெரம்பலூரில் பேருந்தில் இருந்து கீழே இறங்கிய போது நிலைதடுமாறிய விவசாயி சாலையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் மருது (55) என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக செட்டிகுளம் சென்றிருந்த இவர் அதன்பின் மீண்டும் ஊருக்கு பேருந்தில் திரும்பி வந்து கொண்டிருந்தார். இதையடுத்து காரை பிரிவு ரோடு அருகே அந்த விவசாயி பேருந்திலிருந்து இறங்கிய போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.
அதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து பாடாலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.