தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், 16 சிறப்பு ரயில் சேவைகளை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நாளை மற்றும் மே 2 ஆம் தேதிகளில் எழும்பூர் – புதுச்சேரி, திருச்சி – காரைக்குடி, திருச்சி – கரூர், விழுப்புரம் – மதுரை உள்ளிட்ட 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.