டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகம் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை முருகதாஸ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் லாரியானது மதுரவாயல் பைபாஸ் சாலை மேம்பாலத்தில் ஏறும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகதாசை அருகில் உள்ளவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் கவிழ்ந்து கிடந்த கன்டெய்னர் லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் அந்த கண்டெய்னர் லாரியில் இருந்து அதிக அளவில் ஆயில் சாலையில் கொட்டியதால் போக்குவரத்து காவல்துறையினர் அதில் மண்ணை அள்ளி கொட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.