குறுஞ்செய்தியின் வாயிலாக மோட்டார் சைக்கிளை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் பகுதியில் தர்மேந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாணிக்கம் பாளையம் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தர்மேந்தர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாதவர்களை நிறுத்தி காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
அப்போது தர்மேந்தருக்கு தனது மோட்டார் சைக்கிளுக்கு அபராதம் விதித்துள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதுகுறித்து தர்மேந்தர் அன்னூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கட்டியநேந்தல் பகுதியில் வசிக்கும் முரளிதரன் என்பவர் தர்மேந்திரன் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த அன்னூர் காவல்துறையினர் முரளிதரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.