இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.
அதனால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றால் கட்டாயம் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் வரும் வாரங்களில் கொரோனா கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மக்களை அச்சபடுத்துவதற்காக கூறவில்லை. இதுதான் நிதர்சனம். வரவிருக்கும் மிக மோசமான சூழலை நாம் முழு அளவில் எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று தெரிவித்துள்ளது.