திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தே.தி.மு.க. பிரமுகரையும், அவருடைய மகளையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 20-ஆம் தேதி சுற்றுலா தலங்களுக்கு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கக்கோரி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது 15 வயது மகளுடன், பேத்துப்பாறை கிராமத்தை சேர்ந்த தேமுதிக பிரமுகர் மகேந்திரன் கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
அதன்பின் சுற்றுலா பயணிகளை கொடைக்கானலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறி நகராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் தேமுதிக பிரமுகரையும், அவருடைய மகளையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.