டிக் டாக் செயலி மூலம் அறிமுகமான மாணவியை காதலித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் டிஜிட்டல் டிசைனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் டிக் டாக் செயலியின் மூலம் தனக்கு அறிமுகமான எர்ணாவூரில் வசிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இதனை அடுத்து இவர்கள் இருவரும் காதலிப்பது அந்த மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததால் மாணவியை கண்டித்துள்ளனர். இதனால் தனது தோழியை பார்க்க செல்வதாக கூறி கடந்த 16ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
இதனையடுத்து மாணவியை அவளது பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காணாமல் போன மாணவி அடையாரில் இருக்கும் விக்னேஷ் வீட்டில் தங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாணவியை மீட்டு விக்னேஷின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.