கடையின் முன்பு படுத்து தூங்கிய வாலிபரின் உடலில் திடீரென தீப்பிடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கரையான்சாவடி டிரங்க் ரோடு பகுதியில் இருக்கும் ஒரு கடையின் முன்பு இரவு நேரத்தில் வாலிபர் படுத்து தூங்கியுள்ளார். இந்நிலையில் திடீரென இரவு நேரத்தில் அந்த வாலிபர் உடலில் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் தீயை அணைக்க போராடி உள்ளனர். ஆனாலும் தீயில் கருதி அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து பூந்தமல்லி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தீயில் கருகி உயிரிழந்த அந்த வாலிபர் பூந்தமல்லி பகுதியில் வசித்து வந்த மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது. இவர் தனது வீட்டை விட்டு கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியேறியதும், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை சேகரித்து அதனை பழைய இரும்பு கடைகளில் போடுவதன் மூலம் வரும் வருமானத்தில் வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குடிபோதையில் அந்த வாலிபர் சிகரெட் புகைத்து விட்டு நெருப்பை அணைக்காமல் போட்டதால் உடல் தீப்பிடித்து எரிந்ததா அல்லது வேறு யாரேனும் மணிகண்டனை உயிருடன் தீ வைத்து எரித்து கொலை செய்தார்களா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.