இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். ஒருசில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிளை திருப்பி அனுப்பும் அவலமும் அரங்கேறி வருகிறது. இவ்வாறு ஆக்சிஜனுக்காக ஏங்கும் மோசமான நிலை இந்தியாவில் நிலைமை உருவாகிவிட்டது.
இந்நிலையில் இதற்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் மார்பு பகுதியில் தலையணையை வைத்து அதன் மேல் குப்புறப்படுத்து கொண்டு மூச்சை இழுத்து விடும் முறையை பின்பற்றும் போது சுவாச பாதையானது விரிவடைந்து சுவாசம் மேம்படுத்தபடுவதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் வெண்டிலேட்டர் தேவையை குறைக்கலாம் என தெரிவித்துள்ளார்.
தொற்று பாதித்தவர்களுக்கு ஆக்சிஜன் அளவு 94% க்கும் குறைவாக இருக்கும்போது இந்த முறையில் படுக்க வைத்தால் ஆக்சிஜன் அளவு அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறையை கர்ப்பிணிகள், இதய பாதிப்பு, முதுகு தண்டுவட பாதிப்பு உள்ளவர்கள் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.