முக கவசம் அணியாமல் அபராதம் விதித்த அதிகரிக்கும், கடை உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள அத்திப்பட்டு பகுதியில் இருக்கும் கடைகளில் அம்பத்தூர் மண்டல அதிகாரிகள் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என்று சோதனை செய்துள்ளனர். இதனை அடுத்து அதிகாரிகள் ஐ.சி.எப் காலனியில் இருக்கும் அரிசி கடை மற்றும் ஒரு துணிக்கடையில் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணியாததால் கடை உரிமையாளருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
அந்த சமயம் மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் முகக் கவசம் அணியாமல் வந்ததால் கடை உரிமையாளர்கள் அபராதம் விதிக்கும் நீங்கள் முக கவசம் அணிந்து இருக்கிறீர்களா என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து அரிசி கடை உரிமையாளரான லட்சுமணன் என்பவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த லட்சுமணனை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதிக்கும் மாநகராட்சி அதிகாரிகள் முககவசம் அணியாமல் வருவதோடு, ரசீதில் அன்றைய தேதிக்கு பதில் வேறு ஒரு தேதியை போட்டு வழங்குவதாகவும் வியாபாரிகள் சார்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.