வீட்டிற்குள் மர்மமான முறையில் இறந்து அழுகிய நிலையில் வழக்கறிஞரின் உடலானது மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள நங்கநல்லூர் பகுதியில் மாரி குமார் என்ற வழக்கறிஞர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு அனுஷா என்ற மகள் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மீனாட்சி இறந்தாலும், அனுஷா விடுதியில் தங்கி படிப்பதாலும் மாரிகுமார் மட்டும் வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் பழவந்தாங்கல் காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை அக்கம்பக்கத்தினர் உதவியோடு உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது வழக்கறிஞர் மாரி குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், மேலும் அவரது உடலானது அழுகிய நிலையில் காணப்பட்டது. அதன்பின் அவரது உடலை மீட்டு காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாரி குமாரின் இறப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.