தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதுமட்டுமன்றி நாளை முதல் பல கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஏழு மாதங்களுக்குப் பிறகு இன்று தளர்வற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. பால், மருந்து மற்றும் பத்திரிகை விற்பனைக் கடைகளைத் தவிர்த்து மீதமுள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மளிகை கடைகள், காய்கறி கடைகள், ஹோட்டல்கள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்டவையும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. மேலும் முழு ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்துள்ளனர்.