தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதுமட்டுமன்றி நாளை முதல் பல கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
இந்நிலையில் முழு ஊரடங்கானஇன்று மதியம் ஒரு மணிவரை காய்கறி கடைகளை திறந்து வைத்திருக்கலாம் என சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது. உணவகங்களில் இருந்தே வீடுகளுக்கு பார்சல் உணவு வழங்கும் நிறுவனங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் செயல்படலாம். இது தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் 044-23452330, 044-23452362 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.