சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே உள்ள கொந்தகையில் அகழ்வாராய்ச்சியின் போது முதுமக்கள் தாழி, மனித மண்டை ஓடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு மூன்றாவது குழிகள் தோண்டப்பட்டு ஆய்வுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோல் அகரத்திலும், பணிகள் நடைபெற்று வருகிறது கொந்தகையிலும் மூன்றாம் குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சிகள் மேற்கொண்டதில் 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கக்கப்பட்டன. இதையடுத்து இந்த முதுமக்கள் தாழிகளை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்பின் முழுமையாக கிடைத்த அந்த முதுமக்கள் தாழியின் மேல்பரப்பில் கீழ் உள்ள மண்ணை அப்புறப்படுத்தி உள்ளே ஆய்வு செய்தபோது மூட்டு எலும்புகள், மனித மண்டை ஓடு, கை-கால்களின் எலும்புகள், பெரிய எலும்புகள் எடுக்கப்பட்டு தனித்தனியாக பைகளில் போட்டு வைத்தனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், அனைத்து நிறுவன சோதனைக்கு அனுப்பி, அதன் பின்னரே அந்த எலும்பு எந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர்களுடையது என்பது குறித்து தெரியவரும் என்றும் கூறினர். மேலும் அந்த தாழியில் இரண்டு கூம்பு வடிவ மண் கிண்ணமும், ஒரு பழங்கால வாளும் இருந்ததால் இறந்தவர் போர் வீரராக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.