சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கானாடுகாத்தான் பகுதியில் செட்டிநாடு கைத்தறி சேலைகள் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனாவால் தடை விதிக்கப்பட்டுள்ளதால் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் கைத்தறி தொழிலில் 500-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் புவிசார் குறியீடு செட்டிநாடு சேலைகளை கிடைத்துள்ளது. காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கலைநயமிக்க அரண்மனை வீடுகள் இருப்பதால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அங்கு சென்று பார்வையிடுவதுடன், செட்டிநாடு கண்டாங்கி சேலைகள் மற்றும் சுங்குடி சேலைகளை வாங்கி செல்வார்கள்.
தற்போது தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு சுற்றுலா தலங்களை மூட உத்தரவிட்டுள்ளது. இதனால் செட்டிநாடு பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வராததால் கைத்தறி சேலைகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. மேலும் கைத்தறி தொழிலில் ஈடுபட்டு வரும் நெசவாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.