ஊரடங்கு காரணமாக தன் சொந்த ஊருக்கு செல்வதற்காக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு மற்றும் பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் கடைகள் மற்றும் விடுதிகளில் தங்கி வேலை செய்யக்கூடிய வடமாநில தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக தன் சொந்த ஊருக்கு செல்வதற்கு முடிவெடுத்தனர். இதனால் வடமாநில தொழிலாளர்கள் தன் சொந்த ஊருக்கு செல்வதற்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் இன்று மதியம் 2.30 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து கொல்கத்தா புறப்படும் சாலிமார் சிறப்பு ரயிலில் பயணம் செய்ய உள்ளனர். இந்நிலையில் இன்று முழு ஊரடங்கு என்பதால் வடமாநில தொழிலாளர்கள் நேற்றைய தினத்தில் இருந்து ரயில் நிலையத்தில் குவிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.