குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்த பசு மாட்டை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் நகருக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் கூட்டுக்குடிநீர் பணிகளுக்காக ஆங்காங்கே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இவ்வாறு தோண்டப்படும் பள்ளங்களை ஊழியர்கள் சரியாக முடிவதில்லை எனவும், பணிகளை முடிக்க காலம் தாழ்த்துவதாகவும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் செவல்பட்டி தெரு பகுதியில் சில தினங்களுக்கு முன்பு தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக குழி தோண்டப்பட்டு உள்ளது. இந்த பணிகள் இன்னும் முடிவடையாததால் அங்கு இருந்த குழியில் அவ்வழியாக சென்ற பசுமாடு ஒன்று சிக்கிக் கொண்டது. இதனை பார்த்த பொதுமக்கள் மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து குழியில் சிக்கிய மாட்டை உயிருடன் மீட்டுள்ளனர்.