7 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மக்கள் அனைவரையும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் படியும் கேட்டுக்கொண்டுள்ளது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் தமிழக அரசு நேற்று மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது.
அதன்படி வரும் 26ம் தேதி முதல் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளது. ஏற்கனவே அறிவித்த படி ஞாயிற்றுக்கிழமை இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் ஏழு மாதங்களுக்கு பிறகு இன்று ஒருநாள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. நாளை காலை 4 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 80,000 காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்