Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒழித்துக் கட்டுவதே பாஜகவின் நோக்கம் – வைகோ பகீர் குற்றச்சாட்டு …!!

வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், வருணாசிரமம் வகுத்த சாதிகளின் பெயரால், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஒடுக்கப்பட்டு கிடந்த அடித்தட்டு மக்களை முன்னேற்றுவதற்காக இட ஒதுக்கீட்டுக் கொள்கை கொண்டுவரப்பட்ட நிலையில், அந்த அடித்தளத்தையே தகர்த்து நொறுக்கிய பாஜக அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் பத்து விழுக்காடு இடங்களை ஒதுக்கியதாக சுட்டிக்காட்டியுள்ளார் .

இதன் அடுத்த கட்டமாக புதிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்திருப்பதாகவும், இந்தியாவின் மாநில மொழிகளை படிப்படியாக ஒழித்துக் கட்டுவதே புதிய கல்விக் கொள்கையின் முதன்மை நோக்கம் எனவும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இதுவரை கற்பிக்கப்பட்டு வந்த உண்மை வரலாற்று நிகழ்வுகளை மறைத்து, கற்பனை புராண இதிகாசங்கள், சமஸ்கிருதம் மொழி வேதங்கள் தான் வரலாறு என கற்பிக்க முனைந்து செயல்பட்டு வருவதாகவும், அது குறித்து இரண்டு நாள்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டு இருப்பதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு பள்ளிகளிலும் ஹிந்தி, சமஸ்கிருதத்தை படித்தாக வேண்டும் என்ற புதிய கல்வி கொள்கை தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்கும் எதிரானது என்பதால் அதை தமிழகம் முற்று முழுதாக ஒதுக்கி தள்ள வேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |