தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதுமட்டுமன்றி நாளை முதல் பல கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் மொத்தம் 978 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாநகராட்சி அறிவித்துள்ளது. 727 இடங்களில் ஆறு நபர்களுக்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ளது. 10 பேருக்கு அதிகமாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தெருக்கள் 249 உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள படுக்கைகளில் 80% நிரம்பியுள்ளன. மருத்துவமனைகள் வேகமாக நிரம்புவது அரசின் stopcorona.tn.gov.in இணையதளம் மூலம் தெரியவந்துள்ளது.