6 காட்டு யானைகள் தொடக்கப்பள்ளியின் கட்டிடத்தை சேதப்படுத்தியதோடு அரிசி மூட்டைகளை தின்று நாசம் செய்துள்ளன.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டமானது அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் மூன்று காட்டு யானைகள் சோலையார் அணை வனப்பகுதி வழியாக சென்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விட்டது. இந்த யானைகள் தாமஸ் என்பவரின் வீட்டின் மேற்கூரையை உடைத்ததால் அச்சத்தில் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்திற்குள் திடீரென 6 காட்டு யானைகள் புகுந்து பள்ளி கட்டிடத்தை சேதப்படுத்தியதோடு அங்கு வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளை தின்று நாசம் செய்துள்ளன. இதனால் தமிழக கேரளா எல்லை வனப்பகுதியை ஒட்டி மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.