பேருந்து நிலையத்தில் சுற்றுச் சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரியூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 3.5 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலைய கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இறுதிக்கட்ட பணியாக பேருந்து நிலைய சுற்று வட்டார பகுதிகளில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் திடீரென சுற்றி சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்கு சென்று வருவதற்கு ஏற்ப பின்பகுதியில் பாதை வசதி செய்து தரவேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறி உள்ளனர். அதற்கு பொதுமக்களின் வேண்டுகோளை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.