டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற வட மாநிலங்களில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றால் கொத்துக்கொத்தாக மரணிக்கின்றனர் மக்கள். ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதோடு, உடனுக்குடன் படுக்கை வசதிகள் கிடைக்காததே இதற்கு காரணம். மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளவர்கள் கூட ஆக்சிஜன் தட்டுப்பாட்டை எண்ணி கதிகலங்குகின்றனர். வசதிபடைத்த நோயாளிகளை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் தென் மாநிலங்களுக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்க உறவினர்கள் விரும்புகின்றனர். அவர்களின் முதல் தேர்வு சென்னை ஆக உள்ளது.
ஒரே நேரத்தில் அதிகம் பேர் ஏர் ஆம்புலன்ஸ்ஸை நாடுவதால் அவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. முன்பதிவு செய்து மூன்று நாள் வரை காத்திருக்க நேரிடுகிறது. அதிக தேவை காரணமாக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணம் 3 மடங்கு உயர்ந்துவிட்டது. இந்தூரிலிருந்து கொரோனா நோயாளி ஒருவரை சென்னைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அழைத்து வர 24 லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கின்றனர். நோயாளியுடன் வரும் மருத்துவருக்கான கட்டணம் முன்பு 25 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது 3 லட்சமாக அது அதிகரித்து விட்டது.
ஆயிரம் ரூபாய்க்குக் கிடைத்த ஆக்சிஜன் சிலிண்டருக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுக்கும் நிலை உள்ளதே காரணமாக கூறுகின்றனர் ஏர் ஆம்புலன்ஸ் நிர்வாகத்தினர். கொரோனா நோய் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் பரவும் தன்மை கொண்டது. ஏர் ஆம்புலன்சில் நோயாளியை ஏற்றி வரும்போது உடன் பயணிக்க மருத்துவ குழுவினரும் மற்றும் பைலட்டுகளின் சம்மதம் முக்கியம். ஒரு நோயாளியுடன் வரும் ஏர் ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட இடத்தை அடைந்த பின்னர், அதில் பயணித்த அனைவரும் 15 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏர் ஆம்புலன்ஸ் ஆக செயல்படும் தனி விமானத்தின் ரகம் மற்றும் வசதியைப் பொறுத்து கட்டணம் வேறுபடும்.
குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அங்கு உள்ள மருத்துவமனைகளில் போதிய இடவசதி இல்லாததால், அவரை தனி விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்தனர். பழைய விமான நிலையத்தில் தயாராக நின்ற ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட தொழிலதிபர், பின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.