சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருகே கொந்தகையில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே உள்ள கொந்தகையில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் நேற்று முன்தினம் விலா எலும்புகள், மனித மண்டை ஓடு, கால், கை எலும்புகள், சிறிய எலும்புகள், மூட்டுகள், இரண்டு கூம்பு வடிவ மண் கிண்ணங்கள் இரும்பு வாள் ஆகியவை கண்டறியப்பட்டது. அதில் இரும்பு வாள் இருந்ததால் இறந்தவர் போர் வீரனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை மரபணு சோதனைக்கு உட்படுத்த உள்ளனர்.
அதனை தொடர்ந்து சோதனை முடிவுகள் வந்த பிறகே இறந்தவர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர் என்பது தெரிய வரும். இந்நிலையில் ஆராய்ச்சியாளர்கள் நேற்று முதுமக்கள் தாழியை ஆய்வு செய்தனர். அதில் சிறிய எலும்புகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆராய்ச்சி செய்யும் இடத்தில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் ஆராய்ச்சியாளர்கள் பணியை மற்றொரு நாளுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.