தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் பிராணவாயுவை பிற மாநிலங்களுக்கு அனுப்பும் மத்திய அரசின் எதேச்சதிகார நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட மாநிலங்கள் பலவற்றிலும் பிராணவாயு கட்டமைப்பு இல்லாததால் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருவதை சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆனால் இதற்கான கட்டமைப்பு தமிழகத்தில் சரியாக இருப்பதால் இங்கு உற்பத்தியாகும் பிராணவாயுவை பிற மாநிலங்களுக்கு திருப்பிவிடும் நடவடிக்கையை மத்திய அரசு தன்னிச்சையாக மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து ஆக்சிஜன் திருப்பி விடுவதை எதிர்த்துள்ள முதலமைச்சர் தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும் அபாயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய அரசு இது போன்ற விஷயங்களில் மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவது தமிழகத்தில் பாதிப்பை அதிகரிக்கவே வழிவகுக்கும் என்பதை கே.பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
எனவே ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க தமிழக முதல் அமைச்சர் கூடுதலாக கேட்டுள்ள பிராண வாயுவை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் கே.பாலகிருஷ்ணன் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.